கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இருப்பினும் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாத சூழல் எழுந்துள்ளது. அதிலும் சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சியில் வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு உபகரணங்கள், மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, ”சென்னையில், நாளொன்றுக்கு சுமார் 17 ஆயிரத்து 300 துப்புரவுப் பணியாளர்கள், 309 துப்புரவு மேஸ்திரிகள், வார்டு துப்புரவு ஆய்வாளர்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாநகரின் அனைத்து மண்டலங்களிலும் துப்புரவுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் தடையின்றி வழங்கப்படுகிறது தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 3 ஆயிரத்து 600 டன் அளவில் குப்பை சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஆயிரத்து 300 சாலைப்பணியாளர்கள், 3 ஆயிரத்து 500 சுகாதாரப் பணியாளர்களும், வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் களப் பணியில் 15 ஆயிரத்து 250 பேரும், 200 பேர் பரப்புரை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனைத்து பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், முகக் கவசம், கையுறைகள், ஒளிரும் ஆடைகள் பாதுகாப்பு உடைகள் மற்றும் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசம், கையுறைகள் உள்ளிட்ட அனைத்தும் மாநகராட்சியால் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து மண்டலங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான எண்ணிக்கையில் வாரம்தோறும் திங்கள்கிழமையன்று விநியோகிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று வரை 21 லட்சத்து 49 ஆயிரத்து 850 முகக் கவசங்களும், ஒரு லட்சத்து ஆயிரத்து 100 கையுறைகளும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு சென்னை மாநகராட்சி மூலமாக நாள்தோறும் வழங்கப்படுகிறது. மேற்கண்ட வசதிகள் தவிர தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் பணிக்கு வருவதற்கு தினசரி 100 பேருந்துகள் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களிலிருந்து இயக்கப்பட்டுகின்றன.
பாதுகாப்பு உபகரணங்கள் தடையின்றி வழங்கப்படுகிறது பொது மக்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை பொது இடங்கள், வீடுகள் மற்றும் திறந்த குப்பைத் தொட்டிகளில் பொறுப்பின்றி எரியக்கூடாது. பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு முகக் கவசமும், யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். துணியிலான கவசத்தை பயன்படுத்திய பின்னர் சரியான முறையில் துவைத்து, அதனை சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட N95 முகக் கவசத்தை ஒரு நெகிழிப்பை அல்லது காற்று உட்புக முடியாத பையில் வைத்து தனி குப்பைத் தொட்டியிலோ அல்லது மருத்துவ கழிவுகள் போடப்படும் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
அறுவை சிகிச்சை முடிந்து கழட்டிய உடன் அதை உட்புறமாக மடித்து அதனை ஒரு காகிதம் அல்லது பாலித்தீன் பையில் சுற்றி தனி குப்பை பையில் போடவேண்டும் பயன்படுத்திய முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் மீது கிருமிநாசினியான சாதாரண ப்ளீச்சிங் பவுடர் கரைசல் அல்லது சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசல் தெளித்து தனியாக உரையில் சுற்றிக் கட்டி மூடும் வகையில் உள்ள தொட்டியில் சேகரித்து வைத்து, தினந்தோறும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் இடம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.