சென்னை:தமிழ்நாடு பெயரை பயன்படுத்த மறுத்தது, தமிழ் நாட்டுக்கான நீண்ட நெடிய போராட்டத்தை சிறுமைப்படுத்தியது, அரசின் 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பது, அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவது என ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறார்.
இதனைக் கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்றும்; ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அதனைத் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக முற்றுகையிடச் சென்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத ஆர்.என்.ரவி, ஆளுநர் தானா? அல்லது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் ஏஜென்டா? இந்தியாவிலேயே சட்ட மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே ஆளுநர் ஆர்.என்.ரவிதான். அதேபோன்றே, தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேறுவதுதானே நியாயம்?
சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 21 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்களின் மீது விளக்கம் கோரலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். கிடப்பில் போட்டு வைத்திருக்கக் கூடாது.
தமிழ்நாட்டு மக்களை, சட்டமன்றத்தை, மசோதாக்களை ஏற்காவிடில் ஆளுநராக நீடிக்க எந்த அருகதையும், தகுதியும் இல்லை. மக்களை அவமதித்துள்ள நிலையில், ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது. ஆற்றில் தண்ணீர் செல்லும் போது, குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும். அதுமாதிரி, பிரதமர் குட்டியை (ஆளுநர்) விட்டு ஆழம் பார்க்கிறார். அதை தமிழ்நாடு அனுமதிக்காது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அவருக்கு வக்காலத்து வாங்கும் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார்.
இவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். இவர்களை விரட்டியடிக்கிற காலம் வரப்போகிறது. என்பதை ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிரூபிக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஆளுநர் இவ்வளவு அசிங்கப்பட்டு, அவமானப்பட்டது போதாதா? நாகரீகமாக, நயமாக சொல்கிறோம், புரிகிற வகையில் சொல்லவும் மக்கள் தயங்கமாட்டர்கள். ஆளுநர் பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடைபெறும்" எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் ,"ஆளுநராக நீடிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். ஒன்றிய அரசின் பிரதிநிதி என்பதை தவிர ஆளுநருக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை என்பதை அம்பேத்கர், அரசியல் சாசன சபையில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவின்படி செயல்படுவதுதான் அவருக்கு உள்ள வேலை. அதிகார வரம்புகளை மீறி செயல்படுவதோடு, சனாதன கருத்துகளைப் பகிரங்கமாக பரப்பி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, ஒரு மதச்சார்பற்ற நாடு என்று உலகில் கிடையாது என்கிறார்.