தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: கனமழையால் நாசமான பயிர்களுக்கு, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கிடவும், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Marxist demand for complete waiver of agricultural loans
Marxist demand for complete waiver of agricultural loans

By

Published : Jan 15, 2021, 12:04 PM IST

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஒரு வார காலமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் கனமழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன.

வாழை, உளுந்து, பாசிப்பயிறு, வேர்க்கடலை உள்ளிட்ட பல வகையான பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு வழியில்லாமல் சுமார் எட்டு லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடிகள் முழுமையாக அழிந்துவிட்டன. அறுவடை முடிந்து நல்ல வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகள் கலங்கியுள்ளனர். அறுவடை திருநாளான பொங்கல் விழா துயரத்தில் கடந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் எட்டு வருடங்களுக்கு பிறகு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடியிலும் அரசு முறையான கொள்முதல் செய்யாத காரணத்தினால் நெல்லை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

கடந்த நவம்பர் மாதத்தில் கன மழை, நிவர் மற்றும் புரெவி புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் மூழ்கி நாசமடைந்தன. அரசின் சார்பில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணமும் கூட எல்லா பகுதிகளிலும் சமமாக வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலருக்கு இன்னமும் கூட நிவாரணம் சென்று சேரவில்லை. இந்நிலையில் மீண்டும் இடைவிடாத மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

நெற்பயிர்கள் மழைநீரில் நனைந்து மூழ்கிப்போயுள்ளதால் விவசாயிகளும், அவர்தம் குடும்பங்களும் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி நிற்கின்றனர். சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு அரசோ, அலுவலர்களோ இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை என்பது வேதனையான செய்தி.

எனவே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கிட வேண்டும், இயற்கை இடர்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருவதால் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பொங்கலை புறக்கணித்த நன்னிலம் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details