தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாடு மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்' - மா.கம்யூ., குற்றச்சாட்டு

சென்னை: நீட் ஹால் டிக்கெட்டில் பெயர், எழுதும் மொழி, தேர்வு எழுதும் மையம் உள்ளிட்ட அனைத்து தகவல்களிலும் குளறுபடியை ஏற்படுத்தி தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு பாழ்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

By

Published : Apr 26, 2019, 7:02 AM IST

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

"ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் பல குளறுபடிகள் ஏற்பட்டு மாணவர்கள் கல்வி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் பல மாநிலங்களில் தீர்மானிக்கப்பட்டுஅலைக்கழிக்கப்பட்டனர். மேலும் கேள்வித்தாளில் தவறான மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டதால் பல ஆயிரம் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான வாய்ப்பினை இழந்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் வெற்றி பெற முடியவில்லை.

நடப்பாண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு 1,45,385 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு மே மாதம் 5ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தற்போது தேர்வு நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள நுழைவுச்சீட்டுகளில் ஏராளமான குளறுபடிகளால் மாணவர்கள் குழம்பிப் போயுள்ளார்கள். அதாவது, பெயர், புகைப்படம், பதிவு எண், தேர்வு எழுதும் மொழி, தேர்வு எழுதும் மையம் போன்ற அனைத்தும் தவறுதலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் நுழைவுச் சீட்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்கு முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து மாணவர்களும் முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகுவதும், உரிய திருத்தங்களை மேற்கொள்வதும் தேவையற்ற சிரமத்தையும், மனஉளைச்சலையும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அளிப்பதாக உள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தோல்வி அடைவதற்கு வழிவகுக்கும் வகையில் திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் முறையில் தேர்வில் குளறுபடிகளை உண்டாக்கி மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் நோக்கத்துடனேயே நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது தெளிவாகியுள்ளது. எனவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.

மத்திய அரசு பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வோடு விளையாடுவதை நிறுத்தி தமிழகத்திற்கு நடப்பாண்டில் நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு குளறுபடிகளால் தமிழக மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகும் பிரச்னையில், மத்திய அரசை எதிர்த்து போராடி தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு பெற திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது கண்டனத்திற்குரியதாகும். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெற்றிட மாணவர்களும், பெற்றோர்களும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், அமைப்புகளும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details