சோவியத் புரட்சியை நினைவுகூரும் வகையில், நவம்பர் 7ஆம் தேதியன்று உலகெங்கும் ’நவம்பர் புரட்சி தினம்’ கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இன்று, 102ஆவது நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் செங்கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், 'மத்தியில் ஃபாசிச பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள ஃபாசிச ஆட்சிகளை வீழ்த்தி முறியடித்த பெருமை சோஷலிச நவம்பர் புரட்சியையேச் சேரும். இந்த ஃபாசிச பாஜக ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும், இடதுசாரி இயக்கங்கள் மீதும் போர் முனைத் தாக்குதல் நடைபெறுகிறது. அதனையும் கொள்கை வழி நின்று முறியடிப்போம். இன்றைய நவம்பர் புரட்சி தினத்தை நாடு முழுவதும் இடதுசாரி இயக்கங்கள், ஜனநாயக அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர்’ எனத் தெரிவித்தார்.
இதேபோல் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்திலும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் இரா.நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.