சென்னை: சென்னை மாநகராட்சி 55ஆவது வட்டம் தீவுத்திடல் எதிரில் கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வகைப்படுத்தி சென்னைக்கு அப்பால் 40 கிலோமீட்டர் தள்ளி பெரும்பாக்கத்தில் குடியமர்த்தி வருகிறது.
இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. கரையோரம் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் போது அவர்கள் வாழ்ந்த இடத்திலோ, அல்லது மூன்று கிலோமீட்டருக்கு அருகாமையிலோ குடியமர்த்த வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.
சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் குடியிருந்த மக்களை கடந்தாண்டு வலுக்கட்டாயமாக காவல்துறையின் உதவியோடு அரசு அப்புறப்படுத்தும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துப் போராட்டங்களை நடத்தியது. அந்தப்போராட்டத்தின்போது, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 29 தேதி காவல்துறையினரால் சிபிஎம் கட்சியின் கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
மேலும் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரடியாக அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தமிழ்நாடு அரசை வலியுறுத்தினார்.