சென்னை: பழவந்தாங்கல் பி.வி. நகரில், கண்டோமெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள மயான இடத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோருக்கு 1,000 கடிதம் அனுப்பும் இயக்கத்தை, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: "பழவந்தாங்கல் பி.வி.நகரில் ராணுவ கண்டோன்மெண்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான மயானத்தில், 40 ஆண்டுகளாக எந்த வசதிகள் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த இடத்தை மாநில அரசுக்கும் மாநகராட்சிக்கும் ஒப்படைத்தால் மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தொகுதி எம்பி டி.ஆர்.பாலு ஆகியோருக்கு கடிதம் எழுதும் போராட்டம் நடக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி வைக்க பிரதமர் வந்தார். அது முடிந்து பல நாட்கள் ஆகிறது. ஆனல் தற்போது பாஜக தவறான தகவலை வைத்து அரசியல் செய்கிறது. பிரதமர் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும். அதேபோல் இங்கும் நல்ல பாதுகாப்பு இருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.