மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது பொய்யான வழக்குகளை தொடுக்கும் மத்திய அரசை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், “மத்தியில் ஆளுகின்ற பாஜக, சர்வாதிகார ஆட்சியை நடத்திவருகிறது. அரசியல் சட்டம் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ஆட்சியை விமர்சிக்கும் போது, அந்த அடிப்படை உரிமையை பறிக்க கூடிய வகையில் பொய் வழக்குகள் போட்டுகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பேராசிரியர் ஜெயதிகோஷ் உள்ளிட்ட தலைவர்களின் மீது நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.