சென்னை: ஆஸ்த்ரியாவைச் சேர்ந்த மார்டின் ஷெர்ப்லெர், தமிழ்நாட்டில் ஆரோவில் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனத்தை தொடங்கி பல தன்னார்வ அமைப்புகள், மாநில அரசு ஆகியவற்றுடன் இணைந்து, நகர்ப்புறங்கள், தொழிற்சாலைகள் சார்ந்த சூழலுக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதில் உதவி வருகிறார்.
இவரிடத்தில் காலநிலை ஆராய்ச்சியாளர் சிபி அரசு முன்வைத்த கேள்விகளையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் கீழே காணலாம்.
நீண்டகால வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் உள்ள புதிய தொழில் வாய்ப்புகள் என்னென்ன?
சூரிய மின்கூரை (Rooftop Solar) எதிர்கால திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இனிவரும் நாட்களில் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பை அமைப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். உள்ளூர் சூரிய மின்கூரை அமைக்கும் தொழிலைத் தொடங்கினால் அதன்மூலம், எதிர்காலத்தில் நன்கு பலனடையலாம்.
IT, ITES பின்புலம் உள்ளவர்கள், இதுபோன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி கட்டமைப்புகளை கூடுதல் திறன் மிக்கதாக மாற்றுவதற்கான மென்பொருள் சார்ந்த தீர்வுகளை வழங்குவது குறித்தும் திட்டமிடலாம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க அரசு செய்யவேண்டியவை என்ன?