தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பெண்கள் முன்னேற்றத்திற்கு திருமணம் முக்கிய தடையாக இருக்கிறது" - உழைக்கும் மகளிரின் கருத்து ஓர்பார்வை

அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வந்தாலும், திருமணம் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய தடையாக இருக்கிறது என்றும், திருமணத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்றும் பணிக்கு செல்லும் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருமணத்தில் உள்ள பாலின பாகுபாடுகள் நீங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Marriage
Marriage

By

Published : Mar 8, 2023, 7:52 PM IST

சென்னை:சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் இன்று(மார்ச்.8) கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம், பெண்களின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நவீன காலகட்டத்திலும், பெண்கள் தங்களது கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டிய சூழலே உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மகளிர் தினத்தை குறித்தும், மகளிரின் தற்போதைய நிலை குறித்தும் உழைக்கும் பெண்கள் சிலர் கூறிய கருத்துகளைக் காண்போம்...

லதா மங்கேஷ்கர்:அரசு அலுவலரான லதா மங்கேஷ்கர், "தற்போதைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். இதுவே பெண்களின் முன்னேற்றமாக நான் கருதுகிறேன். இருப்பினும் பல்வேறு இடங்களில் இன்னும் பெண்கள் ஆண்களுக்கு கீழே உள்ளவர்கள் என்று எண்ணி வருகின்றனர்.

குறிப்பாக, திருமணம் ஆன பின்பு மனைவி கணவனை விட அதிகமாக சம்பளம் பெறக் கூடாது என்று நினைக்கின்றனர். அது, அவர்களது கெளரவம் என்று நினைத்து, சில இடங்களில் பெண்களை பணிக்கு செல்வதை அனுமதிக்காமல் இருக்கின்றனர். இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும்" என்று கூறினார்.

மோனிகா ஸ்ரீ:ஐடி ஊழியரான மோனிகா ஶ்ரீ கூறும்போது, "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களை வெளியில் பணி செய்வதற்கு பெற்றோர்கள் அனுமதிக்காமல் இருந்தனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் சொந்த ஊரை விட்டு, ஆண்களைப் போல பல இடங்களுக்கு சென்று பணியாற்றுகின்றனர். இதுவே ஒரு வகையான முன்னேற்றம் என்று நான் கருதுகிறேன்.

என் வீட்டில் நான்தான் முதல் பெண்மணி, பெங்களூருக்கு சென்று பணிபுரிந்து வருகின்றேன். திருமணமானதற்கு பின்பு பணிக்கு செல்லாமல் வைத்திருப்பதுதான் தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்தை தடுக்கிறது" என்றார்.

யாழினி:கன்டென்ட் கிரியேட்டராக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் யாழினி கூறுகையில், "பெண்கள் தற்போது அனைத்து படிப்புகளையும் அவர்களாகவே தேர்ந்தெடுத்து படிக்கின்றனர். இதுவே ஒரு பெரிய முன்னேற்றமாக நான் பார்க்கிறேன். அதுமட்டுமின்றி சில துறையில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருக்கின்றனர்.

திருமணம்தான் தற்போது பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியை சமமாக நடத்தினால் பெண்கள் முன்னேற்றம் அடுத்த நிலைக்கு செல்லும்" என்றார்.

தனுஸ்ரீ:ஹெச்ஆர் ஆக பணிபுரியும் தனுஶ்ரீ, "பெண் சுதந்திரத்தை பற்றி நாம் அதிக அளவில் பேசி வருகிறோம். இருப்பினும் முழுமையாக சுதந்திரம் அடையாமல் இருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து. பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு என அனைத்தும் கிடைக்கிறது, இருப்பினும் அதைக் கிடைப்பதற்கு பல்வேறு தடைகளை அவர்கள் தாண்ட வேண்டிய நிலை உள்ளது. ஆண்களுக்கு கிடைக்கும் அனைத்து விஷயங்களையும் பெண்கள் போராடிதான் பெற வேண்டிய நிலை உள்ளது.

அனைத்தையும் மீறி தற்போது சாதித்து வருவது பெண்களின் முன்னேற்றமாக கருதப்படுகிறது. பெண்கள் பல இடங்களில் தனக்கான தேவையை முழுமையாக கேட்டு பெறாமல் இருக்கிறார்கள், அதுவே அவர்களது முன்னேற்றத்திற்கான தடையாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தைரியமாக கேட்டு பெற வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Women's Day Special: தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details