இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி, பூங்கா, வணிக வளாகம், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, ஊரடங்கால் முன்னரே முடிவு செய்யப்பட்ட பல நிகழ்வுகள் தள்ளிப்போயுள்ளன. குறிப்பாக திருமணங்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் வாழ்வின் அடுத்தகட்டம் என்று கூறப்படும் திருமணங்கள், கரோனாவின் கோரத் தாண்டவத்தால் சிலருக்கு எளிமையாகவும், பலருக்குத் தள்ளியும் வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு திருமண நிகழ்வுக்காக மண்டபத்தை முன்பதிவு செய்திருந்தவர்கள் அனைவரும் முன்பதிவை ரத்து செய்து விட்டதால், திருமண மண்டபங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன.
பொதுவாக சித்திரை மாதத்தில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். தெருவுக்கு ஒரு வீட்டிலாவது ஏதாவது ஒரு சுப நிகழ்வு நடக்கும். திருமண மண்டபங்கள் திரைப்பாடல்களை ஒலிக்கவிட்டும், பல வண்ண விளக்குகளை மிளிரச் செய்தும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், நிகழ்ச்சிகள் ஏதுமில்லாமல் வெறிச்சோடி இருக்கின்றன மண்டபங்கள், வருமானமின்றி இருக்கின்றனர் அதன் உரிமையாளர்கள்.