சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தி மொழியிலும் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டு அதிகாரிகளை படக்குழு அணுகியுள்ளது.
ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு எளிதில் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு மெர்லின் மேனகா என்ற தரகர் மூலம் மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு படக்குழுவை அணுகியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மார்க் ஆண்டனி படக்குழு ஆலோசனை மேற்கொண்டது. இதையடுத்து விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் மூலம் தரகர் மெர்லின் மேனகாவிடம் தொலைபேசி மூலமாக பேசி லஞ்சம் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரது அதிருப்தியை தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூன்று இடங்களில் நேரடியாக சென்று சோதனைகள் மேற்கொண்டனர்.
விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் மும்பை சிபிஐ அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்று அளித்து அது குறித்து உரிய விளக்கத்தையும் அளித்தார். இதையடுத்து இடைத்தரகர் மேனகா மெர்லின் உட்பட இரண்டு மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டது. மேலும் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் லஞ்சமாக எவ்வளவு பணம் கொடுத்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணனிடம் கடந்த முறை சிபிஐ அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் மார்க் ஆண்டனி பட இயக்குநர்!