சென்னை: உடல்நிலை சரியில்லாத மாணவரை, பயிற்சியாளர் விடாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வைத்ததால் மாணவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவர்கள் ஈசிஆரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR), கானத்தூரில் தனியார் கடல்சார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கடலூரைச் சேர்ந்த பிரசாந்த் (22) என்ற மாணவர் GME முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மாணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் மாணவர்களுக்கு கல்லூரியில் உடற்பயிற்சி (parade) இருந்துள்ளது.
அப்போது, மாணவன் பிரசாந்த் உடல்நிலை சரியில்லை என கூறியும் பயிற்சியாளர் விடாமல் உடற்பயிற்சியை மேற்கொள்ள கூறியுள்ளார். இதையடுத்து ஒரு கட்டத்தில் மாணவன் பிரசாந்த் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார், மாணவர் பிரசாந்தை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் பிரசாந்த் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பயிற்சியாளர் புருஷோத்தமன் கட்டாயப்படுத்தி உடற்பயிற்சி செய்ய வலியுறுத்தியதால்தான் பிரசாந்த் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சக மாணவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: சென்னை கிரைம் ரவுண்ட்-அப்: பட்டப்பகலில் கொள்ளை அடித்து விட்டு கூலாக சென்ற திருடன்.. கஞ்சா விற்ற ஐ.டி ஊழியர்கள்!
மாணவர் பிரசாந்த் இறப்பினால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், நேற்று இரவு 9 மணி முதல் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த கானத்தூர் காவல் துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10.30 மணிக்கு மாணவர்களை போராட்டத்தை கைவிட வைத்தனர்.
மேலும், மாணவர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பிற்காக காவல் துறையினர் கல்லூரி வாயிலில் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பயிற்சியாளரும், முன்னாள் ராணுவ வீரருமான புருஷோத்தமன் பணி நீக்கம் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மாணவன் இறப்பு குறித்து கானத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல்நலக்குறைவின்போது உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டதால் கல்லூரி மாணவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாங்குநேரியைப்போல் மீண்டும் ஒரு சம்பவம்; பட்டியலின மாணவரை வீட்டிற்கு சென்று தாக்கிய மாணவர்கள்