சென்னை:நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியதற்கு, நடிகை த்ரிஷா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து, த்ரிஷாவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
இதனிடையே, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என தெரிவித்த நிலையில், தான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என மன்சூர் அலிகான் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை பாலியல் ரீதியாக பேசுதல் உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று (நவ.23) காலை 11 மணிக்கு மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், காவல் நிலையத்தில் இன்று ஆஜராக முடியாது என மன்சூர் அலிகான் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய உயர் காவல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மேன்மைமிகு அம்மையீர், திரைப்பட நடிகை த்ரிஷா அவர்களை எனது அரசியல் பேட்டியின் இடையே நான் குறிப்பிட, அது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்க, இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று, தாங்கள் வழக்குப் பதிவு செய்து 41A பிரிவுப்படி விசாரிக்க என்னை அழைத்தீர்கள்.
அம்மா, எனது குரல்வளை 15 நாட்களாக தொடர் இருமலாக இருந்து, நேற்று மிகவும் பாதிப்படைந்து (Throat infection) பேச மிக சிரமமாக இருப்பதால், நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு, நாளை தாங்களைச் சந்திக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை (நவ.23) நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா விவகாரத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து, முன் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் - மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!