நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்திருந்தார்.
அவரின் பேச்சு அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாக கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் புகார் அளித்தார். அதில் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மன்சூர் அலி கான் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெய்சங்கர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து, மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை எனக் கூறி, புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.