சென்னை: நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மனுசூர் அலிகான் சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்து சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மன்சூர் அலிகான் பேச்சிற்கு நடிகை த்ரிஷா தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தியது. மேலும், இது தொடர்பாக புகார் கடிதமும் அனுப்பியது. அதன் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது பெண்களை இழிவாக பேசுதல், பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தும் வகையில் பேசி தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று (நவ. 23) ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால் மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து தனக்கு உடல் ரீதியாக பிரச்சினை உள்ளதால் இன்று ஆஜராக முடியாது எனவும், நாளை ஆஜராகுவதற்கு காவல்துறை அனுமதிக்க வேண்டும் எனவும் கடிதம் ஒன்றை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார்.
அது மட்டுமல்லாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் மனு ஒன்றை அளித்து இருந்தார். இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவு ஆகிவிட்டதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து, தான் தலைமறைவு ஆகவில்லை என மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.