சென்னை:மதுரவாயல் அருகே செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அதே பகுதியில் கார் மெக்கானிக் செட் வைத்து நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மெக்கானிக் செட்டை மூடி விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று வழக்கம்போல் ஊழியர்கள் மெக்கானிக் செட்டை திறந்து பார்த்தபோது, காருக்குள் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, அதில் ஒருவர் உடல் அழகிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காருக்குள் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்து கிடந்தது போரூர் அடுத்த செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கோபி (44) என்பதும், தீபாவளிக்கு முந்தைய நாள் இருவரும் கார் செட்டில் அமர்ந்து மது அருந்தியதாகவும், பின்னர் லோகநாதன் சென்று விட்ட நிலையில், கோபி மட்டும் அதே காரில் அமர்ந்து மது அருந்ததியதாக கூறப்படுகிறது.
எனவே மது போதை அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையில் இறந்து போனாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மதுரவாயல் போலீசார் அந்த பகுதியில் உள்ளவர்கள், ஊழியர்கள் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:யார் இந்த குரூஸ் பர்ணாந்து? தூத்துக்குடி நகரத் தந்தைக்கு இன்று மணிமண்டபம் திறப்பு!