சென்னை: அதிமுகவின் பொது குழு கூட்டம் 2022ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகவும், அப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் சிலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. இந்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும், தீர்மானம் கொண்டு வர பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது எனவும் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி உத்தரவிட்டது.
அதேநேரம் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், உரிமையியல் வழக்கு தொடர தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் குறிப்பிட்டது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதுடன், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது சட்ட விரோதமானது என்றும், கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். அது மட்டுமல்லால், அதிமுக மற்றும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தரப்பில் ஏப்ரல் 11ஆம் தேதி பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வாறு உயர் நீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை கட்சி தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேற்று (மார்ச் 17) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
அதில், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தலைமை அலுவலகத்தில் 25,000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்தி விண்ணப்பம் பெறலாம் எனவும், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதன்மை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 18 மற்றும் 19 ஆகிய நாட்களிலும், மார்ச் 20 அன்று விண்ணப்பம் சரிபார்ப்பும், மார்ச் 21 அன்று விண்ணப்பத்தை திரும்பப் பெறவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல் மார்ச் 26ஆம் தேதியும், முடிவுகள் மார்ச் 27ஆம் தேதியும் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொதுச் செயலாளர் தேர்தல் அறிவித்தது சட்டவிரோதமான ஒன்று எனக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவசர வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற பதிவுத்துறை, நாளை (மார்ச் 19) காலை நீதிபதி குமரேஷ் பாபு இந்த அவசர வழக்கை விசாரிப்பார் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:பாஜக தனித்து போட்டியிட விருப்பம்.. அண்ணாமலை பேச்சின் பின்னணி என்ன?