தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“ஆவின் பால் பாட்டில்களில் வழங்குவது கடினமான ஒன்று” - அமைச்சர் மனோ தங்கராஜ் - மனோ தங்கராஜ்

Dairy Minister Mano Thangaraj: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனம் அல்ல என்றும், பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

aavin milk price hike is not up yet Dairy Minister Mano Thangaraj announcement
பால்வளத்துறை அமைச்சர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 5:07 PM IST

சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஆவின் நல்ல வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 3 மாதத்தில் 295 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் எங்கு கூட்டுறவு சங்கங்கள் இல்லையோ, அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 மாதத்தில் 31 ஆயிரம் மாடுகளுக்கு கடன் கொடுக்கப்பட்டு, புதிதாக கறவை மாடுகள் வாங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் அளவிற்கு இருந்த விற்பனை, இந்த ஆண்டு 2 கோடியே 40 லட்சம் என்ற அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. ஆவினில் கடந்த மாதம் 6.9 சதவீதம் மின் சேமிப்பு இருந்துள்ளது. ஆவின் லாபகரமான நிறுவனமாக விரைவில் வர இருக்கிறது.

பொருட்கள் விற்பனை செய்வதில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் யாருக்கும், எங்கும் நிலுவைத்தொகை இல்லை. மிக தரமான பால் தரக் கூடியவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது விரைவில் செயல்படுத்தப்படும். கொள்முதல் விலை உயர்த்துவது குறித்து அரசிடம் பேசி, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று முடிவெடுக்கப்படும்.

பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை. ஆவின் பொருட்களின் அளவிலும், தரத்திலும் எந்த சமரசமும் செய்வதில்லை. வரும் புகார்களை ஆய்வு செய்து, சரி செய்து வருகிறோம். ஆவின் நிர்வாகத்தில் இருக்கும் விஜிலென்ஸ் குழு, தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.

தனியார் நிறுவனங்களை விட, ஆவின் பொருட்கள் விலை குறைவாகத்தான் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களை கஷ்டப்படுத்தும் நோக்கில் ஆவின் என்றைக்கும் செயல்படாது. தீபாவளிக்குத் தயாராகி விட்டோம். இந்த வருடம் நல்ல வரவேற்பு கண்டிப்பாக மக்களிடம் இருந்து வரும்.

ஆவின் லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனம் இல்லை. ஒரு கார்டை வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 15 லிட்டர் வரை முறைகேடாக வாங்கியது நானே செய்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மறுசுழற்சி செய்யக்கூடிய பாக்கெட்டுகளில்தான் ஆவின் பால் வழங்கப்படுகிறது. தற்போது உடனடியாக பாட்டில்களில் பால் வழங்குவது கடினமான ஒன்று. அதற்காக பிளான்ட் எல்லாம் புதிதாக கட்ட வேண்டி இருக்கும்.

சராசரியாக ஒரு நாளைக்கு ஆவின் மூலம் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. காலையில் பால் தாமதம் என்பது நிச்சியமாக இல்லை. நகரத்தில் 1.30 மணிக்குள் பால் கொடுக்கிறோம், ஆவினை வெற்றிகரமான நிறுவனமாக மாற்றுவதுதான் எங்கள் எதிர்கால இலக்கு” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்ஆர்பி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.. கர்ப்பிணி உள்பட 10 பேர் மயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details