சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் தடுக்க காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி செய்வதறியாமல், தொலைக்காட்சி, செல்போன்கள் மூலம் பொழுதைக் கழிக்கின்றனர். அனைத்தும் ஒருவித சலிப்பை ஏற்படுத்துவதால் இளைஞர்கள் சிலர் விபரிதமான செயலில் இறங்கியுள்ளனர். வீட்டின் மாடிக்குச் சென்று மாஞ்சா நூலில் பட்டம் விடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி மாலை தனியார் செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் புவனேஷ் (25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணாசாலை வழியாக வீட்டிற்குச் சென்றபோது அவரின் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில் படுகாயமடைந்த அவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்களால் 108 வாகனத்தின் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவருக்கு கழுத்தில் 14 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக பட்டம் விட்ட நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள வீட்டு மாடியில் மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட சுமார் ஏழு இளைஞர்களைப் பிடித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து பட்டம், மாஞ்சா நூல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் எச்சரித்து அனுப்பினர். எஞ்சியுள்ள மூவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே சென்னையில் பட்டம், மாஞ்சா நூல் விற்க அரசு தடை விதித்திருந்தது. மீறி விற்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்து இருந்தனர். ஆனால், ஊரடங்கால் பட்டம் விடும் கலாசாரம் மீண்டும் தொடங்கியுள்ளது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.