சென்னை: தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(ஜூலை23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனைவருக்கும் பெண்கள் உரிமைத் தொகை, மேகதாது அணை விவகாரம், மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவை குறித்தும், திமுகவைக் கண்டித்தும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா, ''மணிப்பூர் கலவரங்களை வெளிநாட்டு நபர்கள் தூண்டிவிடும் கருத்தாகப் பல பேர் கூறியுள்ளனர். மணிப்பூர் மலைப்பகுதியில் இருந்து மியான்மருக்கு எளிதாய் செல்லலாம். ஆகையினால் இதைப் பயன்படுத்தி சீனா இந்தியாவில் கலவரங்கள் மூட்டி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தாரா?.
வேங்கைவயல் கிராமம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. ஆனால், தற்போது மணிப்பூருக்கு மட்டும் போராட்டம் நடத்துகின்றார். அவர் பட்டியலின மக்களின் பாதுகாவலர் கிடையாது என எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் திருமாவளவன் ஒரு மோசடி பேர்வழி என்பது இன்றைக்கும் ஊர்ஜிதம் ஆகவில்லை. மேற்கு வங்காளத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணப்படுத்தி திரிணாமுல் குண்டர்கள் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கண்டிக்காதவர்கள் மணிப்பூர் பற்றி கண்டிக்கக் கூடாது” எனக் கூறினார்.