திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன்,அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் ஜூன் 20ம் தேதி கைதுசெய்தனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் - bail for manikandan
10:42 July 07
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் கணவன் - மனைவியாக வசித்துள்தாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை என்றும், கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்துள்ளதாக மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.
புகார்தாரரான நடிகை தரப்பில், மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவருடன் கணவன் - மனைவியாக வாழத்துவங்கியதாகவும், தன்னை ஏமாற்றிய மணிகண்டனுக்கு ஜாமீன் அளிக்க கூடாது என வாதிடப்பட்டது.
மணிகண்டன் செல்வாக்கான நபர் என்பதாலும, சாட்சிகளை கலைக்க கூடும் என்பதாலும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் 2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திடவும், விசாரணைக்கு தேவைப்படும் நேரத்தில் ஆஜராகவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்