சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால் விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை விமான நிலைய இயக்குனர், பொது மேலாளர், விமான நிலைய வானிலை இயக்குனர் ஆகியோரின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வான்வெளி பகுதி களப்பணி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், வான் போக்குவரத்து தொடர்பு துறை, விமானப்படை, கடலோர காவல்படை உட்பட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாண்டஸ் புயல் எச்சரிக்கை: விமான நிலையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்
தமிழ்நாடு, புதுச்சேரியை மாண்டஸ் புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சித்துறை எச்சரிக்கையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது
புயலால் உருவாகும் சூழ்நிலையை கையாள்வதற்கான அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசர நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். காற்று பலமாக வீசும் போது, சிறிய ரக விமானங்கள், குறிப்பாக ஏ டி ஆர் ரக சிறிய விமானங்கள் பாதிப்புக்குள்ளவதை தவிர்க்க, விமானங்களை, விமான நிலையங்களில் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும்.
அட்டவணையில் இல்லாத விமானங்கள், பாதுகாப்பை கருதி, சென்னைக்கு வெளியே, வேறுவிமான நிலையங்களில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் எந்த பகுதிகளில் சூழ்நிலைகள் மோசமாக இருக்கிறதோ, அந்தப் பகுதிகளுக்கு விமான சேவைகளை இயக்காமல் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அதோடு விமான பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தேவையான உணவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பயணிகள், ஊழியர்கள் உட்பட யாரும் அச்சப்படத் தேவையில்லை அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விமானங்கள் ரத்து, பயண நேரங்கள் மாற்றி அமைப்பது உட்பட பயணத் திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு முன்னதாகவே உடனுக்குடன் அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்னை வந்த விமானத்தில் சஹாரா நரிகள் கடத்தல்.. குருவி கூறிய பலே காரணம்?