சென்னை: பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் தற்கொலையில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் இருக்கிறது. மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் தற்பொழுது தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவம் படிக்கும் மாணவர்களும் தற்கொலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களின் தற்கொலையைத் தடுப்பதற்கு புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மனம் என்னும் புதிய திட்டத்தின் மூலம் மனநல ஆதரவு மன்றம் தமிழ்நாடு அரசின் முன்முயற்சியின் தொடக்க கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரிகளில் உருவாக்கப்பட உள்ளது.
மனநலம் குறித்த வழக்கமான விழிப்புணர்வை உருவாக்குதல், பயிற்சித்திட்டத்தின் மூலம் மாணவர்களின் மன நலத்தை உறுதி செய்யவுள்ளது. மேலும் உளவியல் சிக்கல்கள் தொடர்பான குறிப்புகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் கண்டு, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். உலக தற்கொலை தடுப்பு தினத்துடன் இணைந்து, செப்டம்பர் 12ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்தத்திட்டத்தின் மூலம் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் நேர்மறையான மனநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனநலப் பிரச்னைகள் குறித்து மாணவர் சமூகத்தை உணரவைக்கவும், மாணவர்கள் குழு அமைத்து உளவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை ஏற்படுத்தப்படும்.