சென்னை செம்பியம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சரவணராஜ்(34). இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்ட்ரல் பகுதியில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு(பிப்.16) 7.30 மணியளவில் சென்ட்ரலில் சவாரிக்காகக் காத்திருந்தபோது, நபர் ஒருவர் எண்ணூர் வரை சென்றுவிட்டு மீண்டும் சென்ட்ரல் வர வேண்டும் என்று கூறி காரில் ஏறியுள்ளார்.
அவரிடம் 1,350 ரூபாய் பேரம் பேசிய சரவணராஜ் எண்ணூர் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது காரை இருட்டான பகுதியில் நிறுத்துமாறுக் கூறி அந்த நபர் இறங்கி சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் கழித்து காருக்கு வந்த அவர் மீண்டும் இறங்கி சென்றார். இதில் சந்தேகமடைந்த சரவணராஜ் அவரை பின் தொடர்ந்து பார்த்த போது, ஒரு வீட்டினை நோட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
மறுபடியும் அந்த நபர் காருக்கு வந்த போது சரவணராஜ் நேரமாவதாகக் கூறி பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் பணமெல்லாம் தரமுடியாது எனக் கூறி காரில் அமர்ந்தார். மேலும் அவரது கையில் பேனா வடிவிலான சிறிய கத்தி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரவணராஜ், அந்த நபரிடம் சாமர்த்தியமாக பேசி பெரியமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.