சென்னை:சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியரின் செல்போன் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூன்று செல்போன் திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என தெரிய வந்தது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளில் பதிவான முக அடையாளங்களை வைத்து வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரை, பர்மா பஜாரில் சுற்றி திரிந்த போது போலீசார் கைது செய்தனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மட்டுமே குறிவைத்து கடந்த 5 ஆண்டுகளாக செல்போன் திருட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக தமிழகம், ஆந்திராவில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவமனை, திருப்பதி அரசு மருத்துவமனை என பல பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை மட்டுமே குறிவைத்து அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை திருடி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் முனியாண்டி உடலில் தீக்காயங்கள் இருந்ததாலும், மாற்றுதிறனாளி என்பதாலும் சிகிச்சைக்கு செல்வதாக கூறி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை சநதேகத்திற்கு இடமின்றி அணுகி திருடியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். முனியாண்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மருத்துவமனை செல்லும் போது கையில் ஒரு நோட்டுடன் சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் சிகிச்சை தொடர்பாக பேசுவேன் என்றும், அவர்கள் எதிர்பாராத நேரத்தில் மின்னல் வேகத்தில் அவர்களின் செல்போன்களை நோட்டிற்குள் வைத்து திருடிவிட்டு வந்துவிடுவேன் என முனியாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.