சென்னை சிட்லபாக்கம், அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர்.
கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் சிசிடிவி கேமராக்களை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிசிடிவி கேமரா திருடுவதற்கு முன் சிசிடிவி கேமராவில் திருடனின் முகம் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான நபர் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்(24) என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிசிடிவி கேமராவை திருடி சென்றதை குறித்து விசாரணை செய்தபோது, அவர் அஸ்தினாபுரம் பகுதியில் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வருபவர் என்றும், குடிப்பதற்கு பணம் இல்லாததால் சிசிடிவி கேமராவை திருடி விற்பனை செய்து அதில் மது வாங்கி குடிக்கலாம் என்ற எண்ணத்தில் திருடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் அவரிடமிருந்து 3 சிசிடிவி கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.