துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று (மார்ச்.17) இரவு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது ரியாஸ் (39) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டவே, அவரை நிறுத்திய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
இச்சோதனையில், அவரது சூட்கேஸ், பையில் மறைத்து வைத்திருந்த 12 ஐபோன்கள், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள், லேப்டாப்களை கைப்பற்றினா். மேலும், அந்நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே செய்து பார்த்தபோது, அவருடைய வயிற்றுக்குள் தங்க மாத்திரை கேப்சூல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பயணி முகமது ரியாசை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, இனிமா கொடுத்து 34 தங்க மாத்திரைகளையும் வெளியே எடுத்தனா். அதன் மொத்த எடை 281 கிராம் என்றும், அதன் சா்வதேச மதிப்பு 13 லட்சம் ரூபாய் என்றும் சுங்கத்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.
ஏற்கனவே அந்நபரிடமிருந்து ஏழு லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐபோன்கள், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள், பழைய லேப்டாப்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியிருந்தனா். இதையடுத்து 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கமாத்திரைகள், மின்சாதனப் பொருள்களையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், முகமது ரியாஸைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.80 லட்சம் பறிமுதல்!