சென்னை: நேபாளத்தை சேர்ந்த ஷபிலால் (55) என்பவர் சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியில் கடந்த 13 வருடங்களாக தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் காவலாளியாகவும் பணிப்புரிந்து வருகிறார்.
அவரது மனைவி கோபிலாவுக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால், அவரது அறுவை சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை சிறுக சிறுக சேர்த்து அதனை வீட்டில் ஒரு பையில் எடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி வீட்டில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரை சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக, ஷபிலால் திருமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட காவலர்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி கேமராவில் சிக்கிய திருடன் அதில் வாலிபர் ஒருவர் ஷபிலாலின் வீட்டினை நோட்டமிட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்திருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்துகையில், அந்த வாலிபர் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (20) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து செல்போன் எண்ணைக் கொண்டு அந்நபர் அண்ணா நகர் பகுதியில் இருப்பதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் இன்று(டிச.11) அவரைக் கைது செய்தனர். காவலர்கள் நடத்திய விசாரணையில், அந்நபர் மீது ஏற்கனவே பத்து வழக்குகள் பதிவாகியிருப்பதும், கடந்த ஆறு மாதங்களாக, திருமங்கலம், அண்ணா நகர், திருவிக நகர், திருமுல்லைவாயில், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடி வந்ததும் தெரியவந்தது.
கொள்ளையடித்த பணத்தை கொண்டு நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அவரிடம் இருந்து 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து விக்னேஷை புழல் சிறையில் அடைத்த காவல்துறையினர் ஷபிலால் தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் வழங்கினர்.
இதையும் படிங்க:மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் கொள்ளை: 3 கிலோ வெள்ளி, 1.80 லட்சம் ரொக்கம்!