சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மன்னூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஷேக் அலி (வயது 46). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை சிடிஎச் சாலையில் நடந்து சென்றபோது மழை நீர் வடிகாலில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஷேக் அலியை மீட்க அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் சுமார் இரண்டு மணி நேரமாக நீரில் மூழ்கிய ஷேக் அலியை தேடினர்.
இதனிடையே வடிகாலில் ஷேக் அலி விழுந்த தகவல் கிடைத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஷேக் அலியை கண்டுபிடிக்க தாமதமாவதால் அவரது உயிருக்கு ஆபத்து என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிடிஎச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.