சென்னை பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சசிகுமார் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடன் பணியாற்றும் கவிதா என்பவரிடம் ரூ.3 லட்சம் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கான வட்டியாக மாதம் 9 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அசல் பணம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளில் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், கரோனா பேரிடர் காரணமாக சில மாதங்களாக சசிகுமார் வட்டி கட்டவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிதா பெரவள்ளுர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருதரப்பினரையும் காவல்துறையினர் அழைத்துப் பேசியபோது அவர்கள் நீதிமன்றத்தில் முறையிடுவதாக முடிவெடுத்ததை அடுத்து, அவர்களிடம் இருந்து காவல் துறையினர் எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர்.