சென்னை:திருமுல்லைவாயில் பகுதியில் பெண் ஒருவர் தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். அந்தப் பெண் தான் தைத்த துணிகளை நிறுவனத்தில் கொண்டு சென்று கொடுக்க மகளிடம் கூறியுள்ளார்.
துணிகளை எடுத்துச் சென்ற அவரது மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அந்தப் பெண் நிறுவனத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது நிறுவனத்தில் உள்ளவர்கள் சிறுமி முன்பே வீடு திரும்பியதாக கூறியுள்ளனர்.
சிசிடிவி ஆய்வு
அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுமி சென்ற பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் சிறுமி துணிகளை எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் அங்குள்ள வீடுகளில் ஆய்வு செய்த போது சிறுமி ஒரு வீட்டின் கழிவறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சிறுமியிடம் விசாரணை
பின்னர் சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். சிறுமியை அப்பகுதியில் வசிக்கும் ஓட்டுநர் குமரேசன் என்பவர் வலுகட்டாயமாக கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், சிறுமி கத்தி கூச்சல் போடவே அங்குள்ள கழிவறையில் அடைத்து விட்டு குமரேசன் தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து குமரேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர் சுப்பையா படுகொலை- ஆசிரியர் உள்பட 7 பேருக்கு தூக்கு!