சென்னை:ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி, ஒரு தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 24ஆம் தேதி, மாணவி வீட்டிலிருந்து மாயமானார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையிலான காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திருநின்றவூர் சுதேசி நகரைச் சேர்ந்த கௌதம் (18) என்ற இளைஞர், மாணவியைக் கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர்.
அப்போது திருவள்ளூர் மாவட்டம், புதுசத்திரம் பகுதியில் தங்கியிருந்த கௌதமை காவல் துறையினர் பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.