சென்னை: புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம் என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரகுராமிற்குத் திருமணம் செய்வதற்காக வீட்டில் பெண் தேடி வந்துள்ளனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ரகுராமின் தந்தை பாலசுப்பிரமணியன் செல்போனிற்கு ஒரு மணப்பெண் குறித்து தகவல் வந்துள்ளது.அந்த செல்போன் எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணியன் பேசியபோது, தன்னுடைய பெயர் கல்யாண ராமன் எனவும், தன்னுடைய அண்ணன் மகள் ஐஸ்வர்யா என்ற பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பாலசுப்ரமணியன் தன்னுடைய மகனின் விவரங்களைப் பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் பாலசுப்ரமணியனை தொடர்புகொண்ட கல்யாணராமன், ரகுராமை வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டதாகவும் விரைவில் திருமணம் செய்ய நிச்சயம் செய்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து ரகுராமும், ஐஸ்வர்யாவும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில், திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ரகுராமிடம் மருத்துவச் செலவிற்குப் பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய ரகுராம், முதலில் (G-pay) ஜிபேவில் இருந்து ரூ.8 ஆயிரம் பணம் அனுப்பி உள்ளார். இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்குப் பணம் வேண்டும் என ஐஸ்வர்யா பலமுறை ரகுராமிடம் இருந்து சுமார் ரூ.21 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.