சென்னை: பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (46). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சென்னையில் உள்ள இந்தியன் வங்கி, ஆயிரம் விளக்கு கிளையில், பி.கே டூல்ஸ் (BK Tools) என்ற பெயரில் போலியான நிறுவனத்தை உருவாக்கி, அதற்கான போலி ஆவணங்களையும் சமர்ப்பித்து, அதன் மூலம் இந்தியன் வங்கியில் நடப்புக் கணக்கு (Current Account) ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து அக்கணக்கு மூலம் வெளிநாடுகளுக்கு எலக்ட்ரானிக், எலக்டிரிக்கல் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதுபோல நாடகமாடி சுங்கத்துறையில் அளிக்கப்படும் ரசீதையும் போலியாக உருவாக்கி செயல்பட்டு வந்துள்ளார்.
பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை
மேலும் அந்த ரசீதுகளை கண்ணன் இந்தியன் வங்கியில் சமர்பித்து பல கோடி ரூபாய் பணத்தை வெளி நாடுகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். இந்த மோசடியைக் கண்டறிந்த இந்தியன் வங்கி நிர்வாகம், இந்த மோசடி செயல் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பை கண்ணன் ஏற்படுத்தியதாகக் கூறி சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர்.