சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (41). இவரது மனைவி வைஷ்ணவி (39). இவர் சென்னையில் உள்ள இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் டெக்னிக்கல் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று மாலை இவர்வழக்கம்போல் பணி முடிந்து, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பல்லாவரம் போருந்து நிலையத்திலிருந்து மர்மநபர் ஒருவர் வைஷ்ணவியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தது வந்துள்ளார். பின்னர் இருட்டு பகுதி வந்தவுடன் வைஷ்ணவியை வழிமறித்து கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார்.
இதையடுத்து வைஷ்ணவி பயத்தில் அலறியடித்து இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப்பார்த்த அங்குள்ள பொதுமக்களின் கும்பல் கூடவே அந்த மர்ம ஆசாமியும் அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குச் சென்று வைஷ்ணவி அடையாளம் தெரியாத மர்ம நபர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் புகார் அளித்துள்ளார்.