சென்னை நங்கநல்லூரில் ரகுபதி நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி(80). இவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர், திடீரென்று மூதாட்டியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி, பயத்தில் சத்தம் போட்டுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு குவிந்த அக்கம்பக்கத்தினர், அந்த அடையாளம் தெரியாத நபரைப் பிடித்தனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழவந்தாங்கல் காவல் துறையினர், அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவரின் பெயர் தினேஷ் ( வயது 21) என்பதும், கேட்டரிங் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிக அளவில் கஞ்சா போதையில் இருந்ததால் தான், இளம்பெண் என்று நினைத்து மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிவித்திருக்கிறார்.