சென்னை:வியாசர்பாடியை சேர்ந்த இந்திரா ஜெனிஃபர் என்பவர், 14 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விஜயகுமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் வியாசர்பாடி பகுதி செயலாளராக இருந்திருக்கிறார், விஜயகுமார். அப்போது இருந்த அமைச்சர்களிடம் நெருக்கமாக இருப்பது போன்று காட்டிக்கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தன்னை முக்கியமான பிரதிநிதியாக அப்பகுதியில் வெளிக்காட்டி வந்துள்ளார். இதன் மூலமாக அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியும் இருக்கிறார்.
கடந்தாண்டு, திமுக ஆட்சி அமைத்த பின்பு தன்னை திமுகவின் அடிப்படை தொண்டனாக காட்டிக்கொண்டு, முக்கிய அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் வரும்போது அவர்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பது போலவும் காட்டிக் கொண்டு மீண்டும் அரசுத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணத்தை வாங்கி இருக்கிறார். சுமார் 31 பேரிடம் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை வாங்கி மோசடி செய்திருக்கிறார்.
வருவாய் துறை, இந்து சமய அறநிலையத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கஷ்டப்படுகிற யாருக்கும் பலன் கிடைக்காமல் போகாது... தேசிய அணியில் தேர்வான ஏழை மாணவியின் ஊக்கமளிக்கும் கதை...