சென்னை: வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் தினகரன் பிரசாத். இவர் மேன் பவர் நிறுவனம் நடத்திவருவதாக கூறி மூன்று முகநூல் கணக்குகள் மூலம் ஏராளமான ஆண், பெண் நண்பர்களோடு பழகியுள்ளார். மேலும் பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ரசிகர்கள் எனக்கூறிக் கொண்டு சமூக வலைதளத்தில் ஒரு குழுவையும் உருவாக்கியுள்ளார்.
அந்த குழுவில் பாதிக்கப்பட்ட பெண் மென்பொறியாளரும் சேர்ந்துள்ளார். அந்த குழுவினர் ஏழை மக்களுக்கு தங்களால் இயன்ற சேவைகளை செய்து வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தினகரன் பிரசாத், அந்த பெண் மென்பொறியாளரை பார்க்கும் போது இறந்து போன தனது தாயை போலவே இருப்பதாக கூறி பழகி உள்ளார்.
அம்மா என்றே அழைத்து அன்பாக பேசி வந்த தினகரன் பிரசாத் உதவி செய்வதாக கூறி பெண் மென்பொறியாளரிடம் இருந்து பணம் வாங்கி உல்லாசமாக இருந்துள்ளார். இந்த உண்மை அறிந்த பெண் மென் பொறியாளர் தினகரன் பிரசாத்திடம் பேசுவதை தவிர்த்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் குடி போதையில் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள அந்த பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்று தகராறு செய்துள்ளார். அதன் பின் காவல்துறைக்கு அந்தப்பெண் தகவல் தெரிவித்ததையடுத்து,பின்னர் தினகரன் பிரசாத் தலைமறைவாகினார்.