சென்னை:சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் நாள்தோறும் பல விரைவு, மின்சார ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. அதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலை ஓட்டுநர் மதியழகன் ஓட்டிச் சென்றார்.
அந்த ரயில் திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தில் 5 அடி நீளமுள்ள தென்னை மரத்துண்டு ஒன்று கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஓட்டுநர் மதியழகன் ரயில் இன்ஜினை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் மரத்துண்டு ரயில் இன்ஜின் சக்கரத்தில் சிக்கி உள்ளது.
அதைத் தொடர்ந்து, ரயிலை நிறுத்திய ஓட்டுநர் மரத் துண்டை சக்கரத்திலிருந்து அகற்றி உள்ளார். பிறகு அந்த மரத் துண்டை ஓட்டுநர் மதியழகன் ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.
மேலும், ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான ரயில்வே காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், திருநின்றவூர் நேரு நகரைச் சேர்ந்த செந்தில் வீட்டில் தென்னை மரம் இருந்து வந்த நிலையில், அதனை யாரோ வெட்டி ரயில் பாதையில் போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான சிலரைப் பிடித்து காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வந்தனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்ட காவலர்கள், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக தண்டவாளத்தில் சுற்றித் திரிந்த பாபு (42) என்பவரை பிடித்து திருவள்ளுர் ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், பிடிபட்ட நபர் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் தென்னை மர துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றது தெரிய வந்துள்ளது. அதன் பேரில் பாபுவை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது 150 (1) (a) ரயில்வே சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தொடர்ந்து ரயில் விபத்துகள் நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரயில்களை குறிவைக்கும் முயற்சியா? ரயில் பாதையில் தென்னை மரத்துண்டு வைத்த சம்பவத்தால் பரபரப்பு!