தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு அலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்போவதாகக் கூறி மிரட்டியுள்ளார். தனது பெயர் பாட்ஷா எனவும், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 8ஆவது மாடியிலிருந்து பேசுவதாகவும் தெரிவித்து இணைப்பை துண்டித்துள்ளார்.
இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள், முதலமைச்சர் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் போலி என தெரியவந்தது. இதையடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த செல்போன் எண் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகர் தெருவில் இருந்து வந்தது கண்டறியப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற மடிப்பாக்கம் காவலர்கள், அலைபேசி மூலம் மிரட்டியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.