சென்னை: எம்.ஜி.ஆர் நகர், வி.பி அகிலன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, கூலி வேலை செய்துவருகிறார். இவரது மனைவி திலகவதி(35), தனியார் நிறுவன ஊழியர். இவர்களது மகள் சாருலதா(12), 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சுப்பிரமணி மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால் திருமணமான நாள் முதலே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாகத் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் கணவன், மனைவி இடையே மோதல் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி திடீரென காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்து எனது கழுத்தை வெட்டு என கூறியுள்ளார். அதற்கு திலகவதி எந்த பதிலும் கூறாமல் எழுந்து சென்றதால், உடனே சுப்பிரமணி அதே கத்தியை வைத்து மனைவி மற்றும் மகளின் கழுத்தை லேசாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
திலகவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து கழுத்து மற்றும் கையில் வெட்டுபட்டு காயமடைந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார் தப்பி ஒடிய சுப்பிரமணியைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அசோக் நகர் மெட்ரோ ரயில் மேம்பாலம் மீது நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக ஒரு நபர் மிரட்டல் விடுத்து வந்தார். இது குறித்த தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசி அவரை மீட்டனர். பின்னர் அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, தனது மனைவி மற்றும் மகளைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய சுப்பிரமணி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று பரிசோதனை செய்வதற்காகச் சுப்பிரமணியை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: 13 வருடங்களாக குழந்தை இல்லாததால் தம்பதி மரணம்: கொலையா? தற்கொலையா?