சென்னை: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் (எ) அக்பர் கடத்தல் விவகாரத்தில், பயங்கரவாதி தவுபிக் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரி போல் நடித்து கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிலதிபர் அக்பர் ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தெரிந்து வைத்துக்கொண்டு, என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து 3 கோடி பணத்தை பறித்து தப்பிவிட்டார். இந்த வழக்கில் பயங்கரவாதி தவுபிக்கின் மனைவி சல்மா மற்றும் வலதுகரமாக செயல்படும் கட்டை காதர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முக்கிய மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி தவுபிக்கை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தவுபிக் தொடர்ந்து தலைமறைவாகி இருந்து வந்தார். இதனால் சென்னை போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து பயங்கரவாதி தவுபிக்கை தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாதி தவுபிக்கை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்துள்ளனர். லுக் அவுட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலைய அதிகாரிகளால் மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக தொழிலதிபர் கடத்தலுக்கு பிறகு மூன்று கோடி ரூபாய் பணத்துடன் பங்களாதேஷிற்கு சென்று தலைமறைவானது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இதுபோன்று கடத்தல் சம்பவம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை வைத்து வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்வதையே தவுபிக் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பணம் தீர்ந்த பிறகு மீண்டும் சம்பாதிப்பதற்காக கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கம்போல் உல்லாசமாக வாழ்ந்து வந்த தவுபிக் போலி பாஸ்போர்ட் மூலமாக இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கடத்தல் சம்பவத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் சென்னை வந்த பயங்கரவாதி தவுபிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். தவுபிக் மீது 14 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ளது. குறிப்பாக 2002 முதல் 2008 வரை பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.
2002 இல் மும்பையில் பேருந்தில் குண்டு வைத்தது தொடர்பாக தவுபிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முதன்முறையாக உத்திரப்பிரதேசம் நொய்டாவில் கைது செய்யப்பட்ட தவுபிக் 2015 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு சிறையில் இருந்து வெளியான தவுபிக் நாம் மனிதர் கட்சி என்ற அரசியல் கட்சியை உருவாக்கி தமிழகத்தில் செயல்பட்டு வந்தார்.
இறைவன் ஒருவனே மற்றும் இஸ்லாமிய தற்காப்பு படை போன்ற அமைப்பு உருவாக்கி தீவிரவாத கும்பலுக்கு ஆள்சேர்க்கும் பணியிலும், நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டதால் தேசிய புலனாய்வு முகமை அமைப்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிராம்பட்டினம் கொலை வழக்கு என பல கொலை வழக்குகளும் தவுபிக் மீது நிலுவையில் உள்ளது.
மேலும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தீவிரவாத அமைப்பிற்கு உதவியதும் தெரியவந்துள்ளது. பல பயங்கர வழக்குகளில் தொடர்புடைய தவுபிக் தொடர்ந்து ஹவாலா பரிமாற்றத்தில் சென்னையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னைக்கு யாருக்கும் தெரியாமல் வந்த பயங்கரவாதி தவுபிக் ஏதேனும் கடத்தல் திட்டத்துடன் வந்துள்ளாரா? தீவிரவாத செயலில் ஈடுபட வந்துள்ளாரா என்று விசாரிக்க தவுபிக்கை போலீஸ் காவலில் எடுக்க வடக்கு கடற்கரை போலீசார் திட்டமிட்டுள்ளனர். பயங்கரவாதி தவுபிக் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரி என கூறி திமுக பிரமுகரை மிரட்டிய இளைஞர் கைது!