தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோட்சேக்களின் வாரிசுகளுக்கு காந்தி வாரிசுகளின் பேச்சுகள் கசக்கத்தான் செய்யும் - மு.க. ஸ்டாலின் - முன்னாள் பிரதமர் நேரு

மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோட்சேக்களின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தியின், நேருவின் வாரிசுகளின் பேச்சுகளைப் பார்த்தால் கசக்கத்தான் செய்யும் என்று தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

By

Published : Dec 26, 2022, 6:37 AM IST

Updated : Dec 26, 2022, 12:02 PM IST

சென்னை கலைவாணர் அரங்கில் கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 25) நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், எனது அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய என்று சொல்வது மட்டுமல்ல, கலைஞருடைய அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியவராக போற்றப்படக்கூடிய கோபண்ணாவின் அயராத உழைப்பின் காரணமாக உருவான மாமனிதர் நேரு என்ற நூலினை வெளியிடக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமைப்படுகிறேன்.

இது ஜவஹர்லால் நேருவின் வரலாறு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் வரலாறு மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறாகவும் அமைந்திருக்கிறது.இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், எதிர்கால இந்தியாவானது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான கையேடாகவும் இது அமைந்திருக்கிறது. 2006 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் நேரு பற்றிய தகவல்கள் அனைத்தையும் திரட்டி ஆங்கிலத்தில் இந்த நூலை 2018 ஆம் ஆண்டு கோபண்ணா வெளியிட்டார். அந்த நூல் தான் இப்போது தமிழில் வெளியாகி இருக்கிறது.

இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொண்டிருந்ததும், இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொள்ள வேண்டியதும் ஜவஹர்லால் நேருவை தான். எனது அரசியல் வாரிசு நேரு தான் என்று மகாத்மா காந்தி சொன்னார். காந்தியை உலகமே வியக்கிறது. அத்தகைய காந்தியடிகள் வியக்கும் மனிதராக இருந்தவர் நேரு. பளிங்கு போல் தூய்மையானவர். சந்தேகங்களுக்கு

அப்பாற்பட்ட நிலையில் உண்மையானவர். அச்சமோ, அதிருப்தியோ இல்லாத மாவீரர். ராணுவ வீரனின் துடிப்பும் உண்டு, தேர்ந்த அரசியல்வாதியின் நிதானமும் உண்டு. துணிவில் நேருவை மிஞ்ச ஆள் இல்லை. அவருடைய கரங்களில் தேசம் பாதுகாப்பாக இருக்கிறது என்று காந்தியடிகள் சொன்னதாக இந்த புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் குரலை மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தவர் நேரு.

இந்தியா முழுமைக்குமான மனிதராக, இந்தியா முழுமைக்குமான பிரதமராக நடந்து கொண்டார். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒற்றைத் தன்மை, ஒற்றை சட்டம் ஆகிய அனைத்துக்கும் எதிராக இருந்தவர் நேரு. மதத்தை சமையல் அறையில்அடைத்துவிடாதீர்கள். எதைச் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது, யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்றெல்லாம் சொல்லி மலினப்படுத்தி விடாதீர்கள் என்று சொன்னவர் நேரு.

தமிழகத்தின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவது இந்தித் திணிப்பு ஆகும். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என்ற வாக்குறுதியை வழங்கியவர் பிரதமர் நேரு. இதன் பின்னனியில் என்ன நடந்தது என்பதை இந்த புத்தகத்தில் கோபண்ணா அவர்கள் விபரமாக எழுதி இருக்கிறார். தனது வாழ்நாளில் 11 முறை மட்டுமே தமிழகம் வந்த நேரு மகத்தான பல சாதனைகளைச் செய்து கொடுத்தார்.

  • நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம்
  • பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை
  • ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை
  • கிண்டியில் இந்துஸ்தான் டெலி பிரிண்டர்
  • அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை
  • திருச்சி பெல்
  • ஆவடி டேங்க் பேக்டரி
  • சென்னை ஐஐடி - இவை அனைத்தும் தமிழ்நாட்டில் பிரதமர் நேருவின் பெயரைச் சொல்லும் அடையாளங்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வரைக்கும் வரவில்லை என்பதோடு ஒப்பிட்டால் தான் அன்றைய பிரதமர் நேருவின் பெருமையை நாம் உணர முடியும். இன்று எல்லா குறுக்குவழிகளிலும் இந்தி நுழைவதைப் பார்க்கும் போதுதான் நேருவின் பெருமை உயர்கிறது. சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் தான் ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி நடத்தி வருகிறார். அந்தப் பயணத்தை தென்குமரியிலிருந்து இந்திய எல்லை வரையில் தொடங்கிய நேரத்தில் நான் தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை பெற்றேன். ராகுல் காந்தியின் பேச்சு, இந்தியாவில் பூகம்பத்தை இன்றைக்கு உருவாக்கி வருகிறது.

அவர் தேர்தல் அரசியலை, கட்சி அரசியலைப் பேசவில்லை. கொள்கை அரசியலைப் பேசுகிறார். அதனால் தான் இன்றைக்கு ஒருசிலரால் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். அவரது பேச்சுக்கள் பல நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப் போல இருக்கிறது. நேருவின் வாரிசு அப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். கோட்சேக்களின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தியின், நேருவின் வாரிசுகளின் பேச்சுகளைப் பார்த்தால் கசக்கத்தான் செய்யும். ஆனால் காலம் மகாத்மா காந்தியை, நேருவை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் அதனுடைய அடையாளமாகத்தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'உங்களின் செல்லப்பிள்ளையாக கடைசி வரை நடந்துகொள்வேன்' - கோவையில் உதயநிதி பேச்சு

Last Updated : Dec 26, 2022, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details