சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2006-2009ஆம் ஆண்டு வரை துணைவேந்தராக பணியாற்றியவர் மீர் முஸ்தபா உசைன். இவர், துணைவேந்தராக பணியில் இருந்தபோது 2008ஆம் ஆண்டு மே மாதம் வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் விமானத்தில் சென்றார்.
இதற்காக உயர்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு விமான கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டது. இதன்பின்பு, இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு சாதாரண இருக்கைக்கு முன்பதிவு செய்யப்பட்டது. மீர் முஸ்தபா உசைன் சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் பயணம் செய்து விட்டு உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாகக் கூறி, 2 லட்சத்து 22 ஆயிரத்து 332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாக பெற்றார்.