காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.
பின், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி இரண்டாம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் 'சிகரம்' என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனவும் கூறி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.