தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி நிறுவன முறைகேடு: 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை - Quantum global service securities ltd

சென்னை, மும்பை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வந்த நிதி சேவை நிறுவனங்களின் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிதி சேவை நிறுவனங்களின் முறைகேடு: 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
நிதி சேவை நிறுவனங்களின் முறைகேடு: 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

By

Published : Dec 2, 2022, 7:26 PM IST

சென்னை: சென்னை, மும்பை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் நிதி சேவை நிறுவனமான செக்யூர் கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Secure kloud technologies ltd) என்ற நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சுரேஷ் வெங்கடாச்சாரி, கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், “எங்கள் நிறுவனம் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 8 கே மைல்ஸ் (8K miles) என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. அப்போது எங்கள் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த குவாண்டம் குளோபல் சர்வீஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (Quantum global service securities ltd) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ரோகித் அரோரா, எங்கள் நிறுவன பங்குகளை வெளிச்சந்தையில் சட்டவிரோதமாக போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்து, சுமார் 160 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ரோகித் அரோரா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அமலாக்கத்துறையினர் ஒரு வழக்கைப் பதிவு செய்து சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை நடத்தினர். இதனையடுத்து இவ்வழக்குத் தொடர்பாக சென்னை, மும்பை மற்றும் டெல்லி உள்பட இந்தியா முழுவதும் 16 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாக செக்யூர் கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட், ப்ரோ-பின் கேப்பிடல் சர்வீஸ் லிமிடெட் (Pro-fin capital service ltd), குவாண்டம் குளோபல் சர்வீஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட், டெசர்ட் ரிவர் கேப்பிடல் லிமிடெட் (Desert river capital ltd) ஆகிய பங்கு வர்த்தகம் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 16 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத 1.4 கோடி ரூபாய் ரொக்கம், தங்கம் மற்றும் வைர நகைகள், Demat account எனப்படும் பங்கு வர்த்தக கணக்குகள் தொடர்பான குறிப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மோசடி பணத்தில் வாங்கிய 30 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான குவாண்டம் குளோபல் சர்வீஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனம் மட்டுமல்லாமல், புகார் அளித்த செக்யூர் கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தாரும் மோசடி செய்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக செக்யூர் கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் மிகப்பெரிய அளவில் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதும், நிறுவனத்தின் ஆவணங்களில் முறைகேடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் பங்குகளை சம்மந்தமில்லாத தொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதும், நிறுவனத்தின் பங்கு விலைகளில் முறைகேடு செய்து பல்வேறு பங்கு விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து பண மோசடியில் தலைமை நிதி அலுவலர் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறாகப் புகார் அளித்த நிறுவனம் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் முறைகேடாக பங்குகளை விற்று சட்ட விரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் கடந்த ஆகஸ்டு 9ஆம் தேதி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், செக்யூர் கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகளான சுரேஷ் வெங்கடாச்சாரி, குருமூர்த்தி ஜெயராமன், ரமணி உள்ளிட்டோர் பங்குச் சந்தையில் ஈடுபடுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சி.விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details