சென்னை:கேரளாவைச் சேர்ந்தவரான இயக்குநர் சித்திக், 1986ஆம் ஆண்டு 'பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ' என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் 'நாடோடிக்காட்டு' என்கிற படத்தை இயக்கினார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் இயக்குநராகவும் மாறினார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் இவர் இயக்கிய படங்கள் காமெடியில் கலக்கிய படங்களாக அமைந்தன. அதுமட்டுமின்றி சென்ட்டிமென்ட் காட்சிகளுடன் கூடிய கமர்சியல் படங்களை இயக்குவதில் சித்திக் வல்லவர். இவர் தமிழில் நடிகர் விஜயை வைத்து, 'ப்ரண்ட்ஸ்' மற்றும் 'காவலன்' படத்தை இயக்கினார்.
'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் இன்று வரையும் ரசிகர்கள் உட்பட பல மக்களின் விருப்ப பட்டியலில் உள்ளது. அதில் இடம் பெற்று இருக்கும் வடிவேலுவின் "நேசமணி" என்ற கதாபாத்திரம் தற்போதைய 2k-கிட்ஸ்கள் வரை பிரபலமானது. இதில் விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவரும் இணைந்து நடித்திருப்பர்.
'காவலன்" படத்திலும் வடிவேலுவின் காமெடி பேசப்பட்டது. அதேபோல் விஜயகாந்த் - பிரபு தேவா நடிப்பில் வெளியான, சூப்பர் ஹிட் படமான 'எங்கள் அண்ணா' படத்தையும் சித்திக் இயக்கியுள்ளார். அந்தப் படமும் காமெடியில் பெரிதளவில் பேசப்பட்டது. கடைசியாக தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படத்தை இயக்கி இருந்தார், பிரபல இயக்குநர் சித்திக்.