சென்னை:கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாஸ் பீச்சாட்டுகுன்னல் அப்துல் கரீம் (32). மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் அஜித்தின் வீரம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மலையாளம் பிக் பாஸ் மற்றும் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.
இவர் எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், காசர்கோடு மாவட்டம் பெருன்னா பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண்ணுடன் ஷியாஸூக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் திருமணமாகி விவாகரத்து பெற்று எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ஷியாஸ் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், ரூ.11 லட்சம் ரூபாயை தன்னிடம் இருந்து வாங்கி திருப்பி தரவில்லை எனவும் இளம்பெண் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் ஷியாஸ் கரீம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ஷியாஸ் கரீம் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் ஷியாஸ் நேற்று (அக் 6) துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அப்போது அவரின் குடியுரிமை ஆவணத்தை பரிசோதனை மேற்கொண்ட குடியுரிமை அதிகாரிகள், அவர் மீது வழக்கு இருப்பதை அறிந்து விமான நிலைய காவல் துறைக்கு தகவல் தெரிவித்து, ஷியாஸை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு குறித்த தகவல்களைப் பெற்ற விமான நிலைய காவல் துறையினர், அவர் மீது வழக்கு பதியப்பட்ட கேரள மாநிலம் சண்டேரா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரை கைது செய்வதற்காக சந்தேரா போலீசார் கேரளாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்து; மூச்சுத்திணறி மூதாட்டி உயிரிழப்பு!