சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு நுழைவு வாயிலில் நேற்று முன் தினம் (அக்-11)மலைக்குறவர் சமூகத்தைச்சேர்ந்த வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். குறிப்பாக மலைக்குறவ சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதில்லை, இதுகுறித்து பல முறை அரசு அலுவலகத்தை நாடியும் உரிய பதில் கிடைக்கவில்லை என மேஜிஸ்ட்ரேட்டிடம் வேல்முருகன் கடைசி வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகனின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிய நீதி கிடைக்கும் வரை வேல்முருகனின் உடலை பெறப்போவதில்லை என வேல்முருகனின் குடும்பத்தினர் மற்றும் மலைக்குறவ சமூகத்தைச்சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வாங்க பல அரசு அலுவலகங்களை நாடியும் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வந்ததாகவும், கடந்த 7ஆம் தேதி வீட்டைவிட்டு தனது கணவர் காணாமல் போனதாகவும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் வேல்முருகனின் மனைவி சித்ரா தெரிவித்தார். அதன் பிறகு நேற்று முன் தினம் தங்களது சமுதாயத்திற்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாகவும் கூறினார்.
மலைக்குறவர் சமூகத்தைச்சேர்ந்தவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டம் மேலும் தனது கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், மேலும் உடனடியாக தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்கி அரசு வேலை கொடுக்க வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக அவர் கூறினார். இந்தப் போராட்டம் தொடர்பாக காவல் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நரிக்குறவர் தீக்குளிப்பு...